Published : 13 Jul 2023 06:45 AM
Last Updated : 13 Jul 2023 06:45 AM

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 21 தமிழக பக்தர்கள் பனிமலையில் சிக்கினர்: தவிக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு மீட்க கோரிக்கை

தாம்பரம்: அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கி தவிப்பதாக வீடியோ வெளியிட்டு, தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத்குகைக் கோயிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரையாக சென்று வருவர். அந்த வகையில் இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதிதொடங்கியது. யாத்திரை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருவதால் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் அங்கு பனிமலையில் சிக்கியுள்ளனர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழு மூலமாக கடந்த 4-ம் தேதி 21 பேர் சென்றனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ தூரமுள்ள அமர்நாத் கோயிலுக்கு சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர். அன்று இரவு கோயிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்பட்டபோது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் உள்ளது, வயதானவர்களும் இங்குஇருக்கின்றனர். தமிழக அரசு விரைவில் எங்களை மீட்க உதவ வேண்டும் என்று வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன், நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர். இதனிடையே தங்கள் உறவினர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினரும், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுக்காப்பு படை வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர். கடந்த 1-ம் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் 7-ம் தேதியே சுவாமி தரிசனம் செய்து முடித்து விட்டோம். 9-ம் தேதி நாங்கள் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் 4 நாட்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

இங்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.300 செலவாகிறது. சுகாதாரமான தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. வயதான பலர் இங்குஎங்களுடன் உள்ளதால் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என்ற ஏக்கம் நிலவி வருகிறது. தமிழக அரசு எங்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை அரசு எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் அச்சத்துடனேயே உள்ளோம். எனவேஉரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றார். இந்நிலையில், யாத்திரை சென்று சிக்கியுள்ள தமிழக பக்தர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x