Published : 13 Jul 2023 06:45 AM
Last Updated : 13 Jul 2023 06:45 AM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சிவன்தாங்கலைச் சேர்ந்த விஏஓ ராஜேந்திரன், அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன் டில்லிராஜா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தைகுறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், ``அந்த நிலத்தை வாங்கிய பிறகுகாவல் துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் ஒரு வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு ரூ.10 லட்சம் கேட்டுமிரட்டினர். அதை தர மறுத்ததால் எங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், ``வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை காஞ்சிபுரம் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். அத்துடன் தமிழகம் முழுவதும் காவல் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்களை ஆய்வு செய்யவும், அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்தசொத்துகளை முடக்குவது உட்பட ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக டிஜிபியும், அரசின் தலைமைச் செயலரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கத் தனி தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் எண்களை ஏற்படுத்த வேண்டும். ஊழல் அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடைமுறைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் அந்த சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க தற்போதுள்ள சட்டங்கள்போதுமானதாக இல்லை என்பதால்,ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாக கடந்த 1999-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 24 ஆண்டுகளாகக் கிடப்பில்போடப்பட்டுள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் நாடாளு மன்றம் யோசிக்க வேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT