

சென்னை: மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.ராஜேந்திரன், ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், ரொஹையா சேக் முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழாவையொட்டி, மதுரையில் செப். 15-ல் மாநாடு நடத்துவது, ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை விரைவுபடுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் நீதிமன்ற வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத் தொகையை ரூ.500 ஆகஉயர்த்த வேண்டும். பொதுசிவில் சட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ஜனநாயக விரோதச் செயலில் தொடர்ந்து ஈடுபடும் ஆளுநர், ஒரு மாதம் டெல்லியில் தங்கினாலும் அவர் நினைப்பது நடக்காது. திமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. பாஜக என்ன செய்தாலும், தமிழகத்தில் கால்பதிக்க முடியாது. யாருடன் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது.
வரும் மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு இப்போது இடமில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளிடையே எந்த அதிருப்தியும் இல்லை. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.