Published : 13 Jul 2023 06:40 AM
Last Updated : 13 Jul 2023 06:40 AM

கேரள - தமிழக எல்லைகளில் டெங்கு காய்ச்சல் பரவல்: மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்

சென்னை: கேரள-தமிழக எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவிவருவதால், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துமாறும், தேவையான அளவுக்கு மருந்துகளை இருப்புவைக்குமாறும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

அதேபோல, கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், சிகிச்சைக்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்குமாறும் மாவட்ட நிர்வாகங்களுக்கு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருவோரின் விவரங்களைத் திரட்டி, அது தொடர்பாக கண்காணிக்க வேண்டும். அதனடிப்படையில், அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஏதேனும் ஓரிடத்தில் தொடர்ந்துகாய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அங்கு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதையும், தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல்தெரிவிக்க வேண்டும். இவ்வாறுசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x