Published : 13 Jul 2023 06:25 AM
Last Updated : 13 Jul 2023 06:25 AM
சென்னை: சென்னை தரமணியில் தமிழக அரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக விஜயராகவன் என்பவர் இருந்தார்.
அவரது பணிக் காலத்தில் 2014-ம் ஆண்டில் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தஓலைச் சுவடி பாதுகாப்புப் பணிக்காக பதிவு பெற்ற ஒப்பந்தக்காரர்கள், பணி அனுபவம் உள்ளநிறுவனத்திடமிருந்து ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டது.
இந்த ஓலைச் சுவடி பாதுகாப்புப் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், இத்துறைக்கு தொடர்பே இல்லாதது, ஒப்பந்தம் கோரப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்னர்தான் பதிவு செய்யப்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் மனுக்கள் சென்றன. இதை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், அரசு விதிகளை மீறி டெண்டர் விடப்பட்டது தெரியவந்தது. மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் விஜயராகவன் தன்னிச்சையாக டெண்டர் வழங்கி அரசுக்கு ரூ.12.66 லட்சம் இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விஜயராகவன் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் என கூறப்படும் விஜயகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT