

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, பிற நாட்டுஇலக்கியங்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடும் திட்டத்தின்கீழ் கிரேக்க காப்பியங்களான ஓமரின் ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
சட்டம், ஆணைகள், அரசாணைகள், அறிவிக்கைகள், அறிவிப்புகள், கடிதங்கள், குறிப்பாணைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழிலேயே இருக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஓர் உயரிய விருதை உருவாக்குவதுதான் துறையின் இலக்கு. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்வில், துறைச் செயலர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை ந.அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொறுப்பு இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.