

ராமேசுவரம்: இலங்கையில் இறுதியுத்தம் நடந்த முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட புதைகுழியை சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டு முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் காலத்தின் போதும் அதற்குப் பிறகும் 20-க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இலங்கையின் வட மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
கடந்த ஜுன் 39-ம் தேதி முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க கால்வாய் வெட்டிய போது சில மனித எலும்புகள், போராளிகளின் ஆடைகள், பெண்களின் உள்ளாடைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஜுலை 6-ம் தேதி கொக்கிளாய் பகுதியில் அகழாய்வுப் பணி தொடங்கியதுடன், அதிலிருந்த மனித எலும்பு எச்சங்களும் ஆடைகளும் மீட்கப்பட்டன.
கொக்கிளாய் பகுதியில் வசித்த மக்கள் 1984-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்டு அந்தப் பகுதி ராணுவமயமானது. பின்னர் உள்நாட்டுப் போர் முடிந்த பின் 2012-ம் ஆண்டில் மீண்டும் மக்கள் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கிளாய் பகுதியில் இந்த புதை குழி கண்டறியப்பட்டுள்ளதால் இறுதிப் போரின்போது சரணடைந்தோர், மற்றும் பெண் போராளிகளின் சீருடைகள் போல் இருப்பதால் இவை விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் இலங்கை அரசியல்வாதிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொக்கிளாய் பகுதி புதைகுழியை சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டு அகழாய்வு செய்து முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி முல்லைத் தீவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னிலை வகித்தார். மற்றும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.