Published : 13 Jul 2023 10:34 AM
Last Updated : 13 Jul 2023 10:34 AM

நெல்லை - தென்காசி இடையே அரசு பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு: அதிருப்தியான பயணிகள் வாக்குவாதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி - தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதால் கட்டணத்தை திடீரென ரூ.2 அதிகரித்திருப்பது பயணிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

திருநெல்வேலி டவுன் - பழையபேட்டை வழித்தடத்தில் தென்காசி செல்லும் பிரதான சாலையில் கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகில் பழுதடைந்த வாய்கால் பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இந்த வழித்தடத்தில் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு, டவுன், தெற்கு மவுண்ட் சாலை, டிவிஎஸ் கார்னர், கோடீஸ்வரன் நகர், செக்கடி, மதிதா இந்து கல்லூரி, திருப்பணி கரிசல்குளம் விலக்கு, இ.பி. அலுவலகம், பழைய பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.

இதுபோல் தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேட்டை, இ.பி. அலுவலகம், ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம், செக்கடி, கோடீஸ்வரன் நகர், டிவிஎஸ் கார்னர், வழுக்கோடை, தொண்டர் சந்நிதி வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து சேர்கின்றன. இவ்வாறு மாற்று வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்துகளில் கட்டணம் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும் முன் திருநெல்வேலி- தென்காசி இடையே இயக்கப்படும் ‘ஒன் டு ஒன்’ அரசு பேருந்துகளில் கட்டணம் ரூ.42 ஆக இருந்தது. தற்போது ரூ.44 ஆக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் குளிர்சாதன பேருந்தில் கட்டணம் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து பேருந்து நடத்துநர்களிடம் பயணிகள் கேள்விகள் கேட்டு வாக்குவாதம் செய்கின்றனர்.

வீடியோ வைரல்: இதனிடையே திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு செல்வதற்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.15 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக பயணிகளுக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பாகவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x