

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுதில்லை என்று புகார் கூறியுள்ளனர். மேலும் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வேலை பளுவும் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கஞ்சிபுரம் கோயில்கள், பட்டுச் சேலை கடைகள் நிறைந்த மாநகரம். இங்கு சுற்றுலாவுக்காகவும், பட்டு சேலை வாங்கவும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இதேபோல் அருகாமையில் தொழில் பேட்டைகள் உருவாவதால் பணிக்காக இங்கு வந்து குடியேறும் பொதுமக்களும் அதிகம். இதனால் குப்பைகளும் அதிகம் சேருகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு தற்போது மாநகராட்சியில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் தவிர்த்து, 600-க்கும் மேற்பட்டோர் தேவைப்படுகின்றனர்.
ஆனாலும் 354 ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டே தூய்மைப் பணி நடக்கிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்த ஒப்பந்த தொழிலாளர்களையே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்கும்படி கூறுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களே பிரித்து வழங்குவதில் சுணக்கம் நிலவுகிறது. மேலும் தெருக்களில் வீசப்படும் குப்பைகளை இவர்கள் தனியாக பிரிப்பதென்பது ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் கூடுதல் பணிச்சுமையை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.350 ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ ஆகியவை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் பிஎப் கணக்கில் அவை முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.9300 அளவுக்கு ஊதியம் கிடைத்தால் இதில் ரூ.1000 இவர்களை மேற்பார்வை செய்யும் சிலர் கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த தொகையை கொடுக்க மறுக்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பணி வழங்காமல் அலைக்கழிப்பது, கடினமான இடங்களில் பணி வழங்குவது, அங்கு பணிகள் சரவர செய்யவில்லை என்று நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக மிரட்டுவது போன்ற அச்சுறுத்தல்களை சந்திப்பதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊதியத்தில் கமிஷனா? - இதுகுறித்து பெண் தொழிலாளர் ஒருவர் கூறும்போது, எங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் போதுமானதல்ல. எங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்து வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மாநில காப்பீட்டு நிதிக்கு பிடித்தம் செய்ததுபோக மீதத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
பிடித்தம் செய்த தொகையை தொழிலாளர்கள் பயனடையும் வகையில் முறையாக கணக்கில் செலுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு பணியின்போது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பெத்துராஜ் கூறும்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் அடிமைபோல் நடத்தப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து மாதம் ரூ.1000 கமிஷனாக பெறப்படுவதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கு மாதம் ரூ.8,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த ஊதியத்தில் குடுமபத்தை கவனிக்க முடியாமல் கந்துவட்டி வாங்கி அதில் சிக்குகின்றர். மழைக் காலங்களில் ஒரு தொப்பி கூட இல்லாமல் பாலித்தீன் பேப்பரை தலையில் கட்டி பணி செய்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியது: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாநகராட்சி நேரடியாக ஊதியம் வழங்க முடியாது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்துக்கு பணத்தை மொத்தமாக கொடுப்போம். அவர்களுக்கான ஊதியம் பிடித்தம்போக வங்கி கணக்கில்தான் வரவு வைக்கப்படுகிறது.
இதில் ரூ.1000 குறைவாக போடப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதுபோல் நடந்தால் மாநகராட்சி சார்பில் நேரடியாக தொழிலாளர்கள் வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்துவது குறித்து ஆலோசிப்போம்.
தற்போது புதிய ஒப்பந்ததார்கள் தூய்மை பணிக்கு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஏற்கெனவே பணி செய்தவர்களை அந்தந்த இடத்திலேயே பணியில் அமர்த்தும்படி அவர்களிடம் வலியுறுத்துவோம். எடுக்கப்படும் குப்பைக்கு டன் ஒன்றுக்கு சுமார் ரூ.3,600 என்ற வகையில்வழங்க உள்ளோம். தொழிலாளர்களுக் கான ஊதியம் இன்னும் முடிவு செய்யப் படவில்லை.
தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்க்கப்படும். அதேபோல் அவர்களுக்கு வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மாநில காப்பீட்டு நிதிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. அதனையும் சிலர் எதிர்க்கின்றனர். சட்டப்படி இவை பிடித்தம் செய்யப்பட வேண்டும். அது தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும். இதன்நன்மைகள், விவரங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கப்படும் என்றார்.