

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவது தான் இயற்கை நீதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கும்பகோணத்தில் 94 இளம் தளிர்கள் கருகி உயிரிழக்கக் காரணமான ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத் தீ விபத்து தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
உலகையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த 21 பேரில் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமையாசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு பணியாளர்கள் விஜயலட்சுமி, வசந்தி, நகராட்சி பொறியாளர் ஜெயச்சந்திரன், கல்வித் துறை அதிகாரிகள் பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் இந்த வழக்கில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பழனிச்சாமி, இராதாகிருஷ்ணன், உதவிக் கல்வி அதிகாரிகள் மாதவன், நாராயணசாமி, பாலகிருஷ்ணன், பால சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகராட்சி திட்ட அலுவலர் முருகன் மற்றும் 3 ஆசிரியர்கள் என 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து பற்றி விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் ஆணையம், "எந்த விதிகளையும் கடைபிடிக்காமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளியில் 900 மாணவர்களைச் சேர்த்து படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு" என குற்றஞ்சாற்றியிருக்கிறது.
இது முழுக்க முழுக்க நியாயமான கருத்து ஆகும். மாணவர்களுக்கு பாதுகாப்பான வகையில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளதா? என்பதை உறுதி செய்து அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் இந்த கொடூரமான விபத்தையே தவிர்த்திருக்க முடியும். அவ்வாறு செய்யாததன் மூலம் 94 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த அதிகாரிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்தவகையில் 94 குழந்தைகளின் உயிரிழப்பை படுகொலைகளாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்களை கொலையாளிகளாகவும் தான் பார்க்க வேண்டும்.
கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. பழனிச்சாமி, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் 11 பேர் விடுதலை செய்யப்படுவது முழுமையான நீதி ஆகாது. 94 குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் இன்னும் தீரவில்லை. விபத்தில் உயிர் தப்பிய குழந்தைகள் இன்னும் விபத்தின் தழும்புகளுடனும், வலிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணமான 11 பேரின் விடுதலையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசுத் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் 11 பேரின் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவது தான் இயற்கை நீதியாகவும், கொல்லப்பட்ட 94 குழந்தைகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும். எனவே, மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
ரூ. 25 லட்சம் இழப்பீடு
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பாக ஓரளவு மனநிறைவளிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
அதை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை மதித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனவலியை உணர்ந்தும், குழு எதையும் அமைக்காமல், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிதி உதவியை அரசு நேரடியாக வழங்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.