Published : 12 Jul 2023 06:16 AM
Last Updated : 12 Jul 2023 06:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் உள்ளிட்ட சிலர் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்துவிட்டதாக மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்து, ஆட்சியரின் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ள மானூர் சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த எம்.மாடத்தி என்ற எஸ்தர் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனின் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது, ரூ.1 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜா உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த எனக்கு மானூர் கிராமத்தில் 3 ஏக்கர் 56 சென்ட் இடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணதாசன் மற்றும் அவருடைய மனைவி லெட்சுமி, ஆவரைகுளம் புதூரைச் சேர்ந்த ஞானதிரவியம் மகன் சேவியர் செல்வராஜா ஆகியோர் என்னை மிரட்டி சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டனர்.
எனக்கு எழுத படிக்க தெரியாது. என்னுடைய பத்திரம் ஐஓபி வங்கியில் உள்ளது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து. இடத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT