Published : 12 Jul 2023 06:22 AM
Last Updated : 12 Jul 2023 06:22 AM
சென்னை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) இப்பகுதியில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கு சேவை புரியும் அமைப்பாகும்.
இந்த அமைப்பு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் `அக்ரி இன்டெக்ஸ்' எனும் வேளாண் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களித்து வரும் வேளாண் துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை நேரடியாக அறிமுகப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி அமைகிறது.
இதுவரை இந்த வேளாண் கண்காட்சியின் 20 பதிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது அக்ரி இன்டெக்ஸ் 21-ம் பதிப்பு வரும் ஜூலை 14 முதல் 17-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேளாண் கண்காட்சி இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், புனேவில் உள்ள அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.
மொத்தம் 485 நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சியை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை காணலாம். தொடக்க விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மேயர் ஏ.கல்பனா, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
அக்ரி இன்டெக்ஸ் 2023 தலைவர் கே.தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT