

திருப்பூர்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் கனல் கண்ணனை, நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்ட ஒரு வீடியோவை கனல் கண்ணன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சியை அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை. அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு, எந்த வாசகமும் இல்லை.
அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல. திமுக பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்துடன் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு கனல்கண்ணன் சென்றார்.
அங்கு அவரை நடத்தியவிதம், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை, இந்து விரோத போக்கை சுட்டிக்காட்டுபவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசின் இச்செயல், கருத்து சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும், என தெரிவித்துள்ளார்.