

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலைப்பன் தெருவை சேர்ந்தவர் பாமக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை ர.சத்யா. இவரது மகன் நிஷால் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் காசிமேட்டில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென நிஷாலை அரிவாளால் வெட்ட வந்தனர். சுதாரித்துக் கொண்ட நிஷால், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், இதுகுறித்து தனது தந்தைக்கு செல்போன் மூலம்தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வண்ணை சத்யா, காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், நிஷால் வீட்டுக்கு வந்த அந்த கும்பல், பெட்ரோல் குண்டை அவரது வீட்டில் எரிந்தது. ஆனால், குண்டு தவறுதலாக பக்கத்து வீட்டில் விழுந்து வெடித்தது. உடனே, அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. அப்போது, அந்த இடத்தில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில், நிஷாலுக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நிஷாலை தீர்த்துக் கட்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி, தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.