நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளி நாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட்-1தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான்பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும். அதன்பின், நெக்ஸ்ட்-2தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும். இத்தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘நெக்ஸ்ட்’ தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை அரசு ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘நெக்ஸ்ட்’தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்மாணவர்கள் கலைந்து சென்றனர்.இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
