Published : 12 Jul 2023 06:30 AM
Last Updated : 12 Jul 2023 06:30 AM

3 பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து செங்கல்பட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

செங்கல்பட்டு: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்றார்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

பாமக நிர்வாகிகள் வன்னியர் சங்க மத்திய மாவட்ட தலைவர் காட்டூர் காளி, பாமக செங்கல்பட்டு நகர செயலாளர் பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம் மனோகரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை குறிவைத்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கஞ்சா கள்ளச்சாராயம் மது உள்ளிட்டவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கூலிப்படையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கூலிப்படைகள் ரவுடிகளை நிரந்தரமாக ஒழிக்கவும் தடுக்கவும் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.

பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும். செங்கல்பட்டில் நடைபெற்றது அடையாள ஆர்ப்பாட்டம்தான்.

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பாமகவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்வது குறித்து கட்சி ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x