

பழநி: கோயில் நிலங்களில் கல்லூரி, சிப்காட் உள்ளிட்டவை கட்டுவது சட்டவிரோதமானது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பழநியில் பழனி மலைக் கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராஜா வரவேற்றார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.
இதில், பழநி கோயில் நுழைவுவாயிலில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற வாசகம் பொருத்திய பலகையை அகற்றியது, வசதி படைத்தவர்கள் மட்டும் தரிசனம் செய்யும் பிரேக்கிங் தரிசன முறையை அமல்படுத்துவது, மின் இழுவை ரயில் நிலையத்துக்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும்,
பக்தர்கள் தானமாக கொடுத்த பசுமாடுகளை பராமரிக்காமல், சுயஉதவிக் குழுவினருக்கு தானமாக வழங்குவதாகக் கூறி 220 மாடுகளை அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து கோயில்களில் இந்து அல்லாதவர்கள் அர்த்த மண்டபத்தை தாண்டி வர முடியாது. பழநியில் சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மின் இழுவை ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்கியபோது, இந்து பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். மாற்று மதத்தினர் இந்து மத அடையாளங்களுடன் வந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்து மதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கோயில் பதிவேட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு கோயிலுக்குள் செல்லலாம். பொது நலன் என்ற பெயரில், கோயில் நிலங்களை இந்துக்கள் நலன், ஆன்மிகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது கோயில் சொத்து கொள்ளை யடிக்கப்படுகிறது. கோயில் நிலங்களில் கல்லூரி, சிப்காட் அமைப்பது சட்ட விரோதமானது. இவ்வாறு அவர் கூறினார்.