

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை மாலை மதுரை மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விரைந்தனர். அங்கு மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையிலான போலீஸாரும் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஒருவரது செல்போனில் பேசிய மர்ம நபர், மீனாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்த தகவலின்பேரிலேயே கோயிலில் சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணைப் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்