

விருதுநகர்: காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் தீண்டாமைக் கொடுமைகளை களைய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம், விருதுநகரில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், மாநிலக் குழு உறுப்பினர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா கொண்டாட குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், டீக்கடை, ஹோட்டல், மளிகைக் கடைகளில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பால், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசியப் பொருட்களும் வழங்கக் கூடாது என தடை விதித்துள்ளனர்.
தீண்டாமைக் கொடுமைகளை அகற்ற வேண்டுமென ஆவியூரைச் சேர்ந்த பூபாண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எனவே, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், ஆவியூரில் உள்ள பாதிக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, அங்கு நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி நியாயமான முறையில் ஆய்வு செய்து, உடனடியாக அதை களையும் வகையில் நீதிமன்றத்தில் உண்மைத் தன்மையுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.