

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நேற்றைய நிலவரப்படி 45.07 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு முதல்கட்டமாக 15 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் தொடங்காததால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருகிறது. ஜூலை 1-ம் தேதி ஹேரங்கி அணையில் நீர் இருப்பு 2.73 டி.எம்.சி,
ஹேமாவதி அணையில் 14.19 டி.எம்.சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 29.38 டி.எம்.சி, கபினி அணையில் 4.56 டி.எம்.சி என மொத்தம் 31.41 டி.எம்.சி-யாக இருந்தது. இந்த அணைகளுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,903 கன அடியாக இருந்தது. இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருவதால், இந்த அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
இதன்படி, ஜூலை 10-ம் தேதி நிலவரப்படி ஹேரங்கி அணைக்கு 2,293 கன அடி, ஹேமாவதி அணைக்கு 2,517 கன அடி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 11,029 கன அடி, கபினி அணைக்கு 8.901 கன அடி என 4 அணைகளிலும் மொத்த நீர்வரத்து விநாடிக்கு 24,490 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால், இந்த அணைகளில் மொத்த நீர் இருப்பு தற்போது 45.07 டி.எம்.சி-யாக அதிகரித்துள்ளது. இது இந்த அணைகளின் மொத்த கொள்ளளவில் 39 சதவீதமாகும். இதையடுத்து, தமிழகத்துக்கு முதல்கட்டமாக 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு 17 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இதிலிருந்து 5.55 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி, ஜூலைக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். அதன்படி, இதுவரை (ஜூலை 11) தமிழகத்துக்கு கர்நாடகம் சுமார் 20 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 15 டிஎம்சி தண்ணீரையாவது வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் கர்நாடகத்துக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த ஆண்டு ஆற்றுப்பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாவார்கள்.
கேரளா பங்கும் நமக்குத்தான்: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கேரள மாநிலத்துக்கு ஆண்டுக்கு 30 டி.எம்.சி வழங்க வேண்டும் எனவும், அந்த மாநிலம் தற்போது 3 முதல் 4 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்துவதால், அங்கு ஆயக்கட்டை மேம்படுத்தும் வரை கேரளா பயன்படுத்தியது போக, மீதமுள்ள தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பேசுவதில்லை என்றார்.