

வேலூர்: காட்பாடியில் பிரியாணி கடையை மூட உத்தரவிட்டது ஏன்? என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி - சித்தூர் சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தன. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அப்போது, அவ் வழியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கூட்ட நெரிசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் கடையை மூடுமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்சியரின் நடவடிக்கைக்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தனியார் உணவகத்தின் சார்பில் எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிக வெயில் காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் அல்லது அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடவும், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும்பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்து உணவகத்தை திறக்குமாறு நேரடியாக அறிவுரை வழங்கப் பட்டது.
பின்னர், அந்த உணவகத் தின் உரிமம் மற்றும் இதர விதிமுறைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தனியார் உணவக நிர்வாகத்தின் சார்பில் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கடிதம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே அந்த உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பு கருதியும், நுகர்வோர் நலன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கருதியும் எடுக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒரு சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.