Published : 12 Jul 2023 11:09 AM
Last Updated : 12 Jul 2023 11:09 AM

சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து செய்யாறு அருகே விவசாயிகள் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் பதாகைகளுடன் நேற்று ஊர்வலமாக சென்ற விவசாயிகள்.

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் (தொழிற்பேட்டை) விரிவாக்கம் செய்ய தேத்துரை, குறும்பர், மேல்மா, வீரம்பாக்கம் உள்ளிட்ட 9 கிராமங்களில் 3174.12 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனு அளிக்க 9 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் சிப்காட் விரிவாக்க அலுவலகத்துக்கு நேற்று டிராக்டர்களில் பயணித்தனர். டிராக்டரில் ஊர்வலமாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

செய்யாறு நோக்கி டிராக்டர் களில் ஊர்வலமாக வந்தவர்களை, வந்தவாசி சாலையில் அனப் பத்தூர் கூட்டுச் சாலை பகுதியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், காவல் துறையினரின் தடையை மீறி ஞானமுருகன் பூண்டி கிராமம் வரை வந்தவர்கள், டிராக் டர்களை நிறுத்திவிட்டு செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை, காவல்துறையினர் மீண்டும் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, சிப்காட் விரிவாக்க அலு வலகம் சென்று மனுக்களை அளிக்க அறிவுறுத்தினர்.

அதன்பேரில், அலுவலகத்துக்கு சென்றவர்களிடம் செய்யாறு சிப்காட் நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலியிடம், “நிலம் எடுப்பு அறிவிப்பு மட்டுமே உள்ளது. திட்டம் குறித்த எந்த தகவலும் இல்லை. எந்த வகையான தொழிற்சாலைகள் கொண்டு வரப்படுகிறது என்ற தகவலும் இல்லை.

எனவே, பாதிக்கப்பட்ட எங்களது தரப்பு பதிலை தெரிவிக்க 20 வகையான ஆவணங்களை வழங்க வேண்டும். ஆவணங்களை வழங்கிய பிறகு, இது தொடர்பாக பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை நிலம் எடுப்பு தொடர்பான அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என்றனர். பின்னர் அவர்கள், இது தொடர்பாக மனு அளித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத் துக்கு வந்த சார் ஆட்சியர் அனாமிகாவை முற்றுகையிட்ட பெண்கள், அரசு வழங்கும் சலுகைகள் வேண்டாம். விவசாய நிலங்கள் இருந்தால் போதும். எங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை விட்டுவிடுங்கள் எனக் கூறி மூதாட்டி ஒருவர் திடீரென காலில் விழுந்து கதறி அழுதார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x