Published : 12 Jul 2023 06:32 AM
Last Updated : 12 Jul 2023 06:32 AM
சென்னை: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி சார்பில் தாம்பரம், குன்றத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 4 புதிய கிளைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ம் ஆண்டுதொடங்கப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி இதுவாகும். சென்னையில் 5 லட்சம்வாடிக்கையாளர்களுக்கு வங்கிச்சேவைகளை அளித்து வரும் இவ்வங்கி தற்போது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கி, 2022-23-ம் நிதியாண்டில், ரூ.31,484 கோடி அளவுக்கு வர்த்தகம் மேற்கொண்டு, ரூ.114.78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் முதலீடுகள் ரூ.4,615கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12,486 கோடியாகவும் உள்ளது. இவ்வங்கியில் தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் ரூ.20.26 கோடியாகும்.
அனைத்தும் கணினிமயம்: வணிக வங்கிகளுக்கு நிகராக,வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், துரிதப்பணப்பரிமாற்றச் சேவைகளான ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, இணையவழி வங்கிச் சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் என அனைத்து கணினிவழி வசதிகளையும் இவ்வங்கி கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமலிருந்த இவ்வங்கியின் கிளைகள், கூட்டுறவுத் துறையின் 2023-24-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புக்கிணங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும்அம்பத்தூர் ஆகிய இடங்களில் 4 புதிய வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கிளைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவுத் துறை செயலர் டி.ஜெகந்நாதன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ந. சுப்பையன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ம. அந்தோணிசாமி ஜான் பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT