

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், வாழ்க்கை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடுவில் பழங்கால கருங்கல்லினாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொள்ளிட ஆற்றின் இருகரையின் ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி அதிகாலை கொள்ளிட ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட, சுமார் 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல்லிலான புத்தர் சிலை இருப்பதை பார்த்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வருவாய்த் துறையினருக்கு தகவலளித்ததின் பேரில், வட்டாட்சியர் பூங்கொடி, சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் வருவாய் துறையினர், கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து பார்வையிட்டனர்.
கொள்ளிடம் பகுதியில் சுமார் 8 அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்தச் சிலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.