

கோவில்பட்டி: தென்மேற்கு பருவக் காற்று காலமான தற்போது காற்றாலை பண்ணைகள் மூலம் பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காமல், குறைந்த செலவில் அதிகளவில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதே நேரம் காற்றாலை பண்ணைகளில் நடைபெறும் விதிமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டுவது போல் ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிகழ்ந்துள்ளது.
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து பகுதியில் அதிகளவில் தனியார் நிறுவனங்கள் காற்றாலை பண்ணைகள் அமைத்துள்ளன. இங்கு காற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டு இறக்கை கொண்ட காற்றாடி உடைந்து கீழே விழுந்தது. காற்றாடியின் இறக்கைகள், தலைப்பகுதி உள்ளிட்ட பாகங்கள் அனைத்தும் கீழே விழுந்ததில் உடைந்து சிதறியது.
இப்பகுதியில் விவசாயிகள் ஆடு மாடுகளை மேய்த்து வருவதுடன், விளைநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். காற்றாடி விழுந்த போது அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் நிகழவில்லை. மேலும், உடைந்து விழுந்து காற்றாடியில் இருந்து செல்லும் மின்சார வயர் அறுந்து விழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேதங்களை தனியார் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டனர். காற்றாலை காற்றாடியின் இயக்க ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என கூறப்படுகிறது.
உடைந்து விழுந்த இரண்டு இறக்கை காற்றாடி 27 ஆண்டுகள் இயங்கியுள்ளது. ஆயுட்காலத்தை தாண்டி இயங்கியதே உடைந்து விழக் காரணம் எனத் தெரிகிறது. இது போல் 7 காற்றாடிகள் 20 ஆண்டுகளை கடந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே, கயத்தாறு பகுதியில் இயங்கி வரும் காற்றாலை பண்ணைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆயுட்காலம் கடந்து இயங்கும் காற்றாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.