Published : 11 Jul 2023 07:21 PM
Last Updated : 11 Jul 2023 07:21 PM

உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட 2 வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூரைச் சேர்ந்த எம் ஆர் விஜயபாஸ்கர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட தேர்தல் தகராறில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது, கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ஒரு வாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனை பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஆஜரானது குறித்து ஜூலை 20ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x