

சென்னை: வரும் 18-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 266-ஆவது குருபூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கும் படத்திற்கும் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி அன்னதான நிகழ்ச்சியையும் அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வருகிறது 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் தொடர்பாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருக்கிறார்.
அதிமுகவின் பொதுக்குழு முடிவை ஏற்று, கட்சியின் பொதுச் செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர் ஆகியோரின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் முறைப்படி அங்கீகரித்து அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் என்பது அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது. அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால், சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடநாடு கொலை கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இடையில் கரோனா தொற்று காரணமாக சுமார் ஒரு வருட காலம் நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கு தாமதமானது. இருந்தாலும், சாட்சிகள் விசாரிக்கப்பட்டு சி.ஆர்.பி.சி 313 போடப்பட்டது. வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் இப்போதைய முதல்வரின் ஆணைப்படி மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அவர் தான் மேற்கொண்ட அறிக்கையினை நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் 90 சதவீதம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது.
தற்போது இந்த வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர்(ஏ.எஸ்.பி) அந்தஸ்திலுள்ள ஒரு அதிகாரி விசாரித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி 90 சதவீதம் விசாரித்து முடிக்கக்கூடிய சூழ்நிலையில், ஏன் அவரை விட குறைந்த பதவியிலுள்ள ஏ.எஸ்.பி நிலையில் உள்ள அதிகாரிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது? இதன் மர்மம் என்ன? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கேரளாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் அம்மாநில நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
கொலை, கொள்ளை, திருட்டு, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற கொடுங்குற்றம் புரிந்த இப்படிப்பட்டவர்களுக்காக, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளார்கள். இக்குற்றவாளிகளுக்கு திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஜாமின்தாரர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கும், திமுக-விற்கும் என்ன சம்பந்தம்? ஆகவேதான் இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் சாமுவேல், ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்புகிறார் என்று முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி அவர் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சாமுவேல் பேசக்கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு திமுக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அதற்கு உறுதுணையாகத்தான் ஓ.பி.எஸ். தரப்பும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
தெஹல்காவில் வந்த செய்தியை மட்டும் எடுத்துக்கொண்டு எப்படி விசாரணை செய்ய முடியும்? எனவே இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்கின்ற வேலை என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். அதிகாரம் இருக்கிறது என்பதால் தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. காலம் மாறும். அதிமுக ஆட்சி மலரும். அப்போது தி.மு.க.வின் அராஜகம் குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்" என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.