

மதுரை: தமிழகத்தில் தெருவோரக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபாரத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோர கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் ஒப்பந்தம் மாயில் வாகனம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை. இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மயில்வாகனம் தாக்கல் செய்த மனுவில், ஒப்பந்தப்பணத்தில் ஏப். 19-ல் ரூ.57,14,408 செலுத்திவிட்டேன். மீதமுள்ள தொகையை ஜூன் 1-க்குள் கட்ட வேண்டும் என ராமநாதபுரம் நாகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இவ்விரு மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ''மயில்வாகனம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மீதித்தொகையை ரூ.34,78,536 ஜூலை 5ல் செலுத்திவிட்டார். இதனால் அவரது மனு முடிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளுக்கான வாடகை வசூல் செய்வதற்கான உரிமத்திற்கானது. அந்த ஒப்பந்த அறிவிப்பில் தெருவோரக் கடைகள் எந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் இடம்பெறவில்லை மேலும் வாடகை எவ்வளவு என்ற விபரமும் இடம்பெறவில்லை. இருப்பினும் மயில்வாகனம் ரூ.91,92,944 செலுத்தி ஒப்பந்தம் எடுத்துள்ளார்.
தெருவோர கடைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ராமநாதபுரம் நகராட்சி தெருவோர கடைகளுக்கான இடம் மற்றும் தெருவோரக் கடைகள் இல்லாத இடம் எது என்பதை அடையாளம் காண வேண்டும். தெருவோரக் கடைகளை அதற்கான உரிய இடத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தெருவோர கடைகளுக்கான குழு அமைக்கப்பட வேண்டும். தெருவோரக் கடைகள் எத்தனை என்பதை வரையறை செய்ய வேண்டும். இது போல் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளில் வாடகை வசூல் செய்வதற்கான ஒப்பந்தம் மயில்வாகனம் என்பவருக்கு விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராமநாதபுரம் நகராட்சியில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கடைகள் அமைத்துக் கொள்ளலாம் ஒப்பந்ததாரர் வாடகை எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பது போல் உள்ளது. இதேபோல் எத்தனை நகராட்சியில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதனால் தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளில் தெருவோரக் கடைகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளதா? நகராட்சி பகுதிகளில் தெருவோரக் கடைகளுக்கான இடம் மற்றும் தெருவோரக் கடைகள் அமைக்கக் கூடாத இடம் என அடையாளம் காணப்பட்டுள்ளதா? அனைத்து நகராட்சிகளிலும் தெருவோரக் கடைகளுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதா?
ராமநாதபுரம் நகராட்சியில் சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் தெருவோரக் கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் ஒப்பந்தம் வழங்கியதை நகராட்சி இயக்குநர் எவ்வாறு ஆதாரிக்கிறார்? தெருவோரக் கடைகளுக்கான சான்றிதழ் வழங்காமலும், தெருவோர கடைகளுக்கான எண்ணிக்கை இல்லாமலும், வாடகை நிர்ணயம் செய்யாமலும் ஒப்பந்ததாரர் எப்படி பணம் வசூலிப்பார்? இதேபோல் எத்தனை நகராட்சிகளில் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி தெருவோரக் கடைகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது?
தனியார் ஒப்பந்ததாரரிடம் தெருவோரக் கடைகளிலிருந்து பணம் வசூலிக்கும் அதிகாரம் வழங்கும் போது எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது? தெருவோரக் கடைகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா? இவற்றை நகராட்சி எவ்வாறு கண்காணிக்கிறது? இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 27-க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.