தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்த போலீஸார்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை.
உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை.
Updated on
1 min read

மதுரை: தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவரை போலீஸார் கைது செய்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்த மீனாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸார் என் கணவர் பெயரையும் சேர்த்தனர். அந்த வழக்கில் என் கணவர் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பிறகு என் கணவரின் நிலை என்ன எனத் தெரியவில்லை. கணவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரரின் கணவர் போலீஸார் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அதன் பிறகும் போலீஸார் கைது செய்துள்ளனர். இது சட்டவிரோதம்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்து உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுவுக்கு சிபிசிஐடி போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in