Published : 11 Jul 2023 04:01 PM
Last Updated : 11 Jul 2023 04:01 PM

டெண்டர்களில் பழைய நடைமுறை கோரும் வழக்கு: தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: டெண்டர்களில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத் தொகையை செலுத்துவதில் புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசிபி இன்ஃப்ரா நிறுவனம் சார்பில் அதன் இயக்குநரான முத்துக்குமாரசுவாமி தாக்கல் செய்த மனுவில், "எங்களது நிறுவனம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்த அரசு துறைகளில் ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீத தொகையை முன்வைப்புத் தொகையாக வங்கி வரைவோலையாகவோ அல்லது நிரந்தர வைப்புத் தொகையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ அளிக்கும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது.

ஆனால், தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்படும் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்பு தொகையை ‘இ-வங்கி உத்தரவாதம்’ மூலமாக மட்டுமே செலுத்த வேண்டுமென புதிதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-வங்கி உத்தரவாத நடைமுறை பல வங்கிகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் பங்கேற்க விரும்பும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் இந்த புதிய நடைமுறையினால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த பணிகளுக்கான வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத்தொகையை செலுத்துவதில் புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து தொடர தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.பி.ஹேம்குமார் ஆஜராகி, "தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அது மூலமாகவே முன்வைப்புத் தொகைய செலுத்த வேண்டுமென நிர்பந்தம் செய்கின்றனர். இந்த புதிய நடைமுறை அனைத்து வங்கிகளிலும் இல்லை என்பதால் எங்களைப்போல பல ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x