

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மாற்றுப்பணியில் சென்று விடுவதால் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலார்பட்டி. இந்த கிராமத்தில் 1953-ல் தொடங்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2015 ஏப்ரல் மாதம் 50 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன், காசநோய், வெறிநாய்க்கடி, 24 மணி நேர பிரசவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் எக்ஸ்-ரே, இ.சி.ஜி வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த மருத்துவமனைக்கு கோலார்பட்டி, தேவநல்லூர், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, பூசாரிபட்டி, அந்தியூர், கெடிமேடு, சிஞ்சுவாடி, மலையாண்டிபட்டணம் உள்ளிட்ட 18 கிராமப்பகுதிகளில் இருந்து தினசரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
15 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்த அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். இங்கு மருத்துவ பணியிடங்களுக்கு 7 மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது அவர்கள் மருத்துவ விடுப்பிலும் மாற்றுப் பணியிலும் சென்று விட்டதால் கோலார்பட்டி சுற்று வட்டார பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து கோலார்பட்டியைச் சேர்ந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் மருதாசலம் கூறும்போது, ‘‘கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் 7 மருத்துவர்கள் பணியில் இருப்பதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் உள்ளது. ஆனால், நோயாளிகள் சிகிச்சை பெற சென்றால் போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெறச் சென்றாலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
மொத்தம் உள்ள 7 மருத்துவர்களில் ஒரு மருத்துவர் மகப்பேறு விடுப்பிலும், மற்றொரு மருத்துவர் மருத்துவ விடுப்பிலும் உள்ளார். மீதமுள்ள 5 மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் பணியில் உள்ளார். மற்றவர்கள் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் மாற்றுப் பணிக்கு சென்று விடுகின்றனர்.
24 மணி நேர மருத்துவ சிகிச்சை அளிக்க வசதி இருந்தும், மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடிவதில்லை. எனவே, மருத்துவர்கள் அங்கேயே பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.