

சென்னை: மதுபானங்களை 90 மிலி ‘டெட்ரா பேக்’கில் விற்பனை செய்வது மற்றும் டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செயல்பாட்டில் இருந்த 5,329 கடைகளில் 500 கடைகள் கடந்த ஜூன் 22-ம் தேதி மூடப்பட்டன.
இந்நிலையில், 90 மிலி ‘டெட்ராபேக்’ திட்டத்தை செயல்படுத்துவது, டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பான கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலர் பெ.அமுதா, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். விற்பனை தொகையை வங்கியே நேரடியாகச் சென்று வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பணியாளர்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
கடைகளில் எந்த ஒரு தவறும்நடைபெறாமல் இருக்க நடவ டிக்கை எடுத்து வருகிறோம். மிகச் சில கடைகளில்தான் புகார்கள் வந்துள்ளன. அவற்றையும் ஒழுங்குபடுத்தியுள்ளோம்.
காலி மது பாட்டில்கள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே கையாளுவதற்கு சுலபமாக இருப்பதாலும், இழப்பீடு தவிர்க்கப்படும் என்பதாலும் ‘டெட்ரா பேக்’ வரவேண்டும் என்று அதிகாரிகள், டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்கள் எண்ணுகின்றனர். எனவே, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குறைந்த அளவான 180 மிலியைப் பகிர்வதற்காக 40 சதவீதம் பேர் வேறு ஒருவருக்காக காத்திருப்பது ஆய்வில் தெரிய வருகிறது.அருகில் உள்ள மாநிலங்களில் 90 மிலி தருவதால், அதேபோன்று இங்கும் தருவதற்கு முடிவெடுக்கப்படுகிறது.
தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எப்எல் 2 என்பது காலை 11 மணி முதல்இரவு 11 மணி வரை செயல்படுகிறது. ஆனால், காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் கட்டிடப்பணி உள்ளிட்ட கடுமையான பணிகளுக்கு செய்பவர்களில் சிலர், சிலசிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதைப் பற்றியும் ஆலோசித்து வருகிறோம். இரவே வாங்கி வைத்துக் கொள்ளலாமே என்று கேட்டபோது, அதை அப்போதே பயன்படுத்தி விடுவோம் என்பதால் வேண்டாம் என்றார்கள்.
குடிப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கடைகளில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைகளின் நேரத்தை மாற்றிஅமைப்பதில் சிரமங்கள் உள்ளன.இதில் அரசின் மீது தவறான குற்றச்சாட்டு வரும். ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பார் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததும் இல்லாத இடங்களில் பார்களை திறந்து, அங்குநடைபெறும் தவறுகள் ஒழுங்குபடுத்தப்படும். பார்களின் நேரத்தைஅதிகரிக்க ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது என்றார்.
கள் இறக்குவது தொடர்பாக..: இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறும்போது, ‘‘விவசாயிகளுக்கு நலன் கிடைத்தால் கள் இறக்குவதை அனுமதிக்க, முதல்வருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. பிரச்சினைகளை கட் டுப்படுத்த முடியும் என்றால், கள் இறக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.