

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே குண்டு வீசப்பட்டுள்ளது. எனவே, சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் ஆளுங்கட்சி எம்எல்ஏ, நல்லாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வழக்குக்காக வந்த லோகேஷ் என்பவர் மீது பெட்ரோல் குண்டு வீசி, ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது. அரசியல் கட்சியைச் சேர்ந்த நகரச் செயலாளர் நாகராஜ், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே சமூக விரோத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றது முதல் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே, காவல்துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனியாவது காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைத் தடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருச்சி மாவட்டம், முசிறி அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது தீபக் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறைக்கே சவால் விடும் வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆயிரம் பாக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி, மர்ம கும்பலால் கொலை செய்யப் பட்டுள்ளார். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், கடலூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே, அனைத்து சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.