

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை ராயப்பேட்டை உசேன்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி (32). தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். ரமலான் மாதம் என்பதால் இவர் நோன்பு இருந்துவந்தார். திங்கள்கிழமை காலை 4.30 மணியளவில் ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். சீக்கிரமே சென்றுவிட்டதால் மசூதி அருகே நின்றபடி இரு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பர் அலியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற நண்பர்களையும் அந்த கும்பல் வெட்ட முயற்சி செய்தது. அக்பரை வெட்டிச் சாய்த்துவிட்டு 3 மோட்டார் சைக்கிள்களில் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அக்பர் அலியை அருகே இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
அக்பர் அலி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த படுகொலை குறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவிசேகரன் தலைமையிலான போலீஸார் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனர். அரசியல் முன் விரோதம் காரணமாக அக்பர் அலி படுகொலை செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவினர் திமுகவுக்கும், அக்பர் அலி தலைமையிலான கட்சியினர் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்தனர். இரு கோஷ்டிக்கும் இடையே ஏற்கெனவே மோதல்கள் இருந்தன. இந்த மோதல் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸில் அக்பர் அலி ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கிறார்.
தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அவர் கூறியிருக் கிறார். இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப் பட்டிருப்பதால் எதிர் கோஷ்டியினர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அக்பரின் நண்பர்கள் நசீம்பாய், சாவித், பாஷா ஆகியோருக்கும் கொலை கும்பல் குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அக்பர் அலியை கொலை செய்ததாக இம்ரான்(28), சித்திக்(26), ஜாகீர்(23), ஜான்பாட்ஷா(26) ஆகிய 4 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மாலையில் சரண் அடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட அக்பர் அலிக்கு ஷேர்பானு என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கொலை சம்பவத்தால் ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.