Published : 11 Jul 2023 06:06 AM
Last Updated : 11 Jul 2023 06:06 AM
சென்னை: ரயில் நிலைய அதிகாரி அறை, சிக்னல் முறைகளை கையாளும் அறை (பேனல், ரிலே அறைகள்)களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி, வீடியோ பதிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கோர ரயில் விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து, மனித தவறுகளால் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுதான் பொறுப்பு என்றும் பாதுகாப்பு ஆணையர் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் ரயில் சிக்னல், பாதை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன்தொடர்ச்சியாக, ரயில் நிலைய அதிகாரி அறை, சிக்னல் முறைகளைக் கையாளும் அறை (பேனல், ரிலே அறை)களில் சிசிடிவிகேமரா பொருத்தி வீடியோ பதிவுசெய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை: பாதுகாப்பான ரயில் இயக்கத்தில் முக்கியமான நிலைய அதிகாரி அறை, சிக்னல் முறை கையாளும் அறை (பேனல், ரிலே அறை) ஆகியவற்றில் பொருத்த போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்களை அனைத்து மண்டல ரயில்வேயும் வழங்க வேண்டும்.
இந்த கேமராக்கள் தரவு சேமிப்புக்கான அமைப்பு, கண்காணிப்புமற்றும் மீட்டெடுப்பு நோக்கத்துக்கான அமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த கேமராக்களை விரைவில் நிறுவி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமையை பாதிக்கும்: இதுகுறித்து ஓய்வுபெற்ற ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஒருவர் கூறும்போது, “நிலைய அதிகாரி அறையில் 24 மணி நேரம் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பது ஏற்புடையது அல்ல. அவர்களது தனியுரிமையைப் பாதிக்கும். சிக்னல் முறை கையாளும் அறையில்(பேனல், ரிலே அறை) பணிபுரிவதற்கு மட்டும் அங்கே இருப்பார்கள். அங்கு சிசிடிவி வைத்து கொள்ள லாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT