Published : 11 Jul 2023 06:18 AM
Last Updated : 11 Jul 2023 06:18 AM
கடலூர்: கடலூர் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர் - புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழகப் பகுதியான நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திமுக நிர்வாகி மணிவண்ணன். இவரது இல்ல சுப நிகழ்ச்சி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கடலூர் திமுக எம்எல்ஏ ஜயப்பன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே வீசிவிட்டு சென்றனர். பெட்ரோல் குண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு இருந்தவர்கள் ஐய்யப்பன் எம்எல்ஏவை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பீர் பாட்டிலில் மண்ணெண்ணையுடன் பெட்ரோல் கலந்து வீசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
கடலூரில் உள்ள ஐயப்பன் எம்எல்ஏ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால், புதுச்சேரியிலும் கடலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திமுகவினர் ஐயப்பன் எம்எல்ஏ வீடு முன்பு திரண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT