

கோவை: உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெளிச் சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் வரத்தை அதிகரித்து உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.புரம், சிங்கா நல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.