Published : 11 Jul 2023 06:00 AM
Last Updated : 11 Jul 2023 06:00 AM

500 பெண்கள் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம்: திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம் சார்பில் 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே 31-ம்தேதிவரை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 13.80 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 11.82 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.914.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி,திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரியத்தில் தற்போது 1.74 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், 500 பெண்ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக மானியத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 141 பயனாளிகளில் 10 பேருக்குபுதிய ஆட்டோக்களுக்கான பதிவுசான்று, அனுமதி ஆவணங்களை முதல்வர் வழங்கினார்.

ரூ.2.40 கோடியில் கட்டிடம்: திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில், 10,600 சதுரஅடி கட்டிடப் பரப்பில் தரை மற்றும்முதல் தளத்துடன் ரூ.2.40 கோடியில்ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் நேற்று இந்த வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர், துணைஆய்வாளர், உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த நிகழ்வுகளில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலத் துறை செயலர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x