சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியை மாற்றக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியை மாற்றக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியை மாற்றக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் முதுநிலை மாணவர்களின் விடுதி ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்துவதற்காக முதுநிலை மருத்துவ மாணவர் விடுதியை காலி செய்து வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.

இந்த முடிவுராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சேவைகளை கடுமையாகப் பாதிக்கும். இந்த மருத்துவமனையோடு இணைக்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கென கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர்கள் உட்பட 430 பேர் இங்கு தங்கியுள்ளனர். தற்போது அரசு மேற்கொண்டுள்ள முடிவு காரணமாக, மாணவர் விடுதி திருவல்லிக்கேணி பகுதிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

சிகிச்சை தரம் பாதிக்கும்: இதனால் மருத்துவர்கள் சில மணி நேரங்கள் பயணித்தே மருத்துவமனையை அடைய முடியும். இது நோயாளிகளுக்கான சிகிச்சைத் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவசரகால மருத்துவத்தை மேற்கொள்வதும் தடைபடும். கூடுதலான நேரம் இடைவிடாமல் உழைக்கும் கட்டாயத்தில் உள்ள மருத்துவர்களுக்கு, இதனால் கூடுதல் சுமை ஏற்படும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி மருத்துவமனைவளாகத்துக்குள்ளேயே முதுநிலைமாணவர்கள் விடுதி அமைய வேண்டும். அதிகபட்சமாக 1 கிமீதொலைவில் விடுதி அமையலாம்.விடுதி அதிக தூரம் இருக்கும்பட்சத்தில் மருத்துவமனையின் அங்கீகாரமும் பாதிக்கப்படலாம்.

எனவே, நீதித்துறையும், தமிழகஅரசும் ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர் விடுதி அதே இடத்தில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in