மகளிர் உரிமைத்தொகை திட்டப் பணிகளில் ஈடுபடுமாறு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சிறப்பு பணி அதிகாரி அறிவுறுத்தல்

மகளிர் உரிமைத்தொகை திட்டப் பணிகளில் ஈடுபடுமாறு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சிறப்பு பணி அதிகாரி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப். 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் இம்மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டங்களின் சிறப்புப் பணி அலுவலரான இளம் பகவத், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு பணிக்காக, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிருமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. சில மாவட்டங்களில், தன்னார்வலர்கள் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள், எந்தெந்த ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு, விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்போது மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு, எவ்வித பணி ஒதுக்கீடும் செய்யவேண்டாம்.

தகவல் தொகுப்பு... மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில், ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

சில ரேஷன் கடை பகுதிகளில், தகவல் தரவு பதிவுப் பணிக்கு தன்னார்வலர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கினால், முடிந்தவரை 2 கி.மீ. தொலைவுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும். ஒரு வேளை தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால், அதற்கு அப்பால் பணி வழங்கலாம்.

தன்னார்வலர்களுக்கு தொலைபேசி வழியாக பணியின் முக்கியத்துவத்தை விளக்கி, அவர்கள் சம்மதத்தைப் பெற்று, பணியில் அமர்த்த வேண்டும். விருப்பம் இல்லாவிட்டால் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், வட்டாட்சியர்களுடன் இணைந்து பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் விவரம் கிடைத்ததும், புதிய தன்னார்வலர்கள் இல்லாத ரேஷன் கடைப் பணிகளுக்கு, புதியவர்களைக் கண்டறிய வேண்டும்.

குறிப்பாக, நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடிகல்வித் திட்ட தன்னார்வலர்கள் இல்லை. இந்தப் பகுதிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வேறு பகுதிகளில் உள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டதன்னார்வலர்களை நியமிக்கலாம்.

வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களை கலந்தாலோசிக்காமல், பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். 20 சதவீதம் தன்னார்வலர்களை பதிலியாக பயன்படுத்த அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மைய தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம். தேவைப்படும் போது விண்ணப்பப் பதிவுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in