

மதுரை: மதுரையில் நேற்று மாலை 4.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
காற்றுடன் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது. ஆரப்பாளையத்தில் மரம் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. மேலப் பொன்னகரம் 11-வது தெருவில் மின் கம்பமும், மரமும் சாய்ந்து விழுந்தது.
இதுபோல, மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. நத்தம் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேம்பாலத்துக்கு கீழே உள்ள சாலையில் முழங்கால் அளவு கழிவு நீர், மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மக்கள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
மாநகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையமும் இணைந்து பாதாள சாக்கடை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.