

ராமநாதபுரம்: வரும் தேர்தலில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க முடியாது.
யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆளுநர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். சனாதனக் கோட்பாடு பற்றி பேசாமல் ஆளுநர் அவரது வேலையை பார்க்க வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்குவோம் எனக் கூறியது. தற்போது பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
அனைத்து தேர்தல்களிலும் திமுக, அதிமுக பணத்தை நம்பியே போட்டியிடுகின்றன. திமுக விளம்பர அரசியல் செய்கிறது. தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்து தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராசேந்திரன், மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார், வெங்குளம் ராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.