

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் உருவப் படங்களை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் மீனாட்சிபட்டி. தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் சார்பில் தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது படங்களுடன் கூடிய பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் இந்த பிளக்ஸ் போர்டு மீது பெட்ரோல் குண்டு வீசியதில் இருவரது படங்களும் சேதமடைந்தன. இது பற்றி நேற்று காலையில் அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையில் ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தின் அருகேயுள்ள கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் நள்ளிரவு 12.52 மணிக்கு 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என, மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.