Published : 26 Jul 2014 02:55 PM
Last Updated : 26 Jul 2014 02:55 PM

அவை நடவடிக்கையில் மீண்டும் பங்கேற்க திமுக உறுப்பினர்களை அனுமதிக்க முடியாது: பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டம்

‘‘பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களை, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது’’ என்று சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த 22-ம் தேதி பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, கூட்டத் தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் நீக்கி வைக்கப் பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தி, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதுதொடர்பாக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்ளிட்டோர் பேசினர். அதற்கு விளக்கம் அளித்து அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

கடந்த 22-ம் தேதி திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு, பேரவைத் தலைவர் அனுமதி அளித்தார். பேரவை விவாதங் களை யொட்டி அவர்களுக்கு மாற்று கருத்து இருந்தால், மானியக் கோரிக்கை விவாத்தின்போது கூட அவர்களது நிலையைத் தெளிவு படுத்தி இருக்கலாம். அதைத் தவிர்த்து, வேண்டுமென்றே திட்டமிட்டு, அவை நடவடிக்கை களில் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணத்துடன், தங்களது கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்கு முன்னரே, அவையில் குழப்பம் விளைவித்து, பேரவை நடவடிக் கைகளுக்கு இடையூறு செய்து தங்களை வெளி யேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பேரவைத் தலை வரை அவர்கள் ஆளாக்கினர்.

ஏனென்றால், வெளியே சென்று தங்களது உறுப்பினருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று பேட்டி அளித்து மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதே அவர்கள் நோக்கம். இவர்களது செயலுக்கு துணை போகிற வகையில் கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை எதிர்கட்சித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் பேசியதாவது:

கடந்த 22-ம் தேதி திமுக உறுப்பினர்கள் 4-வது முறையாக வெளியேற்றப்பட்டனர். பேரவை உறுப்பினர்கள் வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின்படி நான் நடந்து கொள்ள வேண்டுமல்லவா? அன்றைய தினம், என் இருக்கைக்கு அருகில் வந்து, கையை நீட்டி, குரல் எழுப்புவதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில், முதலில் அவை முன்னவர் பேசட்டும் என்று சொன்ன பிறகும், பேரவைத் தலைவரையும் மதிக்காமல், அவர்களுடைய கட்சித் தலைமைக்கும் கட்டுப்படாத காரணத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

உறுப்பினர்களின் கோரிக் கைக்கு மதிப்பு கொடுத்து நானும், அவை முன்னவரும் இப்பிரச்சினை குறித்து விரிவான விளக்கம் அளித்து விட்டோம். அதனால் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு பேரவைத் தலைவர் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து மேலும் பேச வேண்டும் என்று புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். ஆனால், பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால் பேரவையில் இருந்து 2 கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x