‘மது இல்லாத தமிழகம்’ திட்டம் | முதல்வர் ஸ்டாலினை பாஜக குழு சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்

அண்ணாமலை (இடது), முதல்வர் ஸ்டாலின் (வலது) | கோப்புப்படம்
அண்ணாமலை (இடது), முதல்வர் ஸ்டாலின் (வலது) | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மது இல்லாத தமிழகம் திட்டத்தை நிறைவேற்றிட, தமிழக பாஜக தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் ஐவர் குழு சந்திப்புக்கு இம்மாத்தில் நேரம் ஒதுக்கி தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

ஆகவே, தாங்கள், வருகின்ற ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in