சரக்கு ரயில் வழித்தடத்தை கண்காணிக்க உ.பி.மாநிலம் பிரயாக்ராஜில் பிரம்மாண்ட கட்டுப்பாட்டு மையம்

சரக்கு ரயில் வழித்தடத்தை கண்காணிக்க உ.பி.மாநிலம் பிரயாக்ராஜில் பிரம்மாண்ட கட்டுப்பாட்டு மையம்
Updated on
1 min read

சென்னை: பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில் ஓடும் ரயில்களை கண்காணிக்கும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் பிரம்மாண்ட கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது.

நாட்டின் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, கிழக்கு-மேற்கு பிராந்தியங்களை இணைக்கும் வகையில் 3,381 கி.மீ. தொலைவில் சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதுவரை 2,196 கி.மீ. தொலைவுக்கு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உலகில் 2-வது பெரிய மையம்: இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களைக் கண்காணிக்க, உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பிரம்மாண்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம், உலகில் 2-வது பெரிய கட்டுப்பாட்டு மையமாகும். மொத்தம் 4.20 ஏக்கர் நிலத்தில், 13,030 சதுர அடி பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 90 மீட்டர் காணொலிச் சுவருடன், 1,560 சதுர அடியில் தியேட்டர் செயல்படுகிறது. ஒருங்கிணைந்த மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் மற்றும் ரயில் மேலாண்மை அமைப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. முழு வழித்தடத்திலும் உள்ள மின் சாதனங்களைக் கண்காணித்தல், கட்டுப்படுத்தல், தொலைவில் இருந்து இயக்கவும் உதவுதல் ஆகியவை இம்மையத்தின் சிறப்பம்சமாகும்.

இதுகுறித்து அர்ப்பணிப்பு சரக்கு வழித்தடத்துக்கான இந்தியக் கழக கூடுதல் பொதுமேலாளர் மன்னு பிரகாஷ் துபே `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்த மையம் மூலம் ரயில் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், ரயிலை நிறுத்தவும் முடியும். ரயில் இயக்கத்தின்போது ஏதாவது பிரச்சினை இருந்தால், உடனுக்குடன் சரிசெய்ய முடியும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இக்கட்டிடம் 2020-ல் திறக்கப்பட்டது. தற்போது 1,152 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில் இயங்கும் ரயில்களைக் கண்காணிக்க முடியும். விரைவில் 1,337 கி.மீ. தொலைவு சரக்கு ரயில் வழித்தடத்தை இந்த மையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இது, வருங்காலத்தில், உலகில் பெரிய கட்டுப்பாட்டு மையமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

சரக்கு வழித்தடத்துக்கான இந்தியக் கழக தலைமைப் பொதுமேலாளர் ஓம்பிரகாஷ் கூறும்போது, "சரக்கு ரயில்களைக் கண்காணிப்பதுதான் இந்த மையத்தின் நோக்கம். இதன் மூலம் அதிக சரக்கு ரயில்களை, கூடுதல் வேகத்தில் இயக்கலாம். எதிர்காலத்தில் மேலும் பல வழித்தடங்களில் இயங்கும் சரக்கு ரயில்களையும் இந்த மையம் மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: சரக்கு ரயில் வழித்தடத்துக்கான இந்திய கழகம் மேலாண்மை இயக்குநர் ஆர்.கே.ஜெயின் கூறுகையில், "ரயில்வேயில் பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்காக, பல்வேறு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சரக்கு ரயில்போக்குவரத்து மேம்படுத்தப்படுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in