Published : 10 Jul 2023 06:07 AM
Last Updated : 10 Jul 2023 06:07 AM
நாமக்கல்: ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் கிராமத்தில் போலீஸாரின் கண்காணிப்பையும் மீறி மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற திருமணமான இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
இக்கொலையைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் மர்ம நபர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தல், வெல்ல உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைத்தல், விவசாய தோட்டங்களில் வாழை மரங்களை வெட்டி சாய்த்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்தன.
இதில், வடமாநில தொழிலாளர் குடிசைக்கு தீ வைத்ததில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் கிராமத்தில் பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் 2 ஆயிரம் பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
இதையடுத்து, போலீஸார் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் சவுந்தரராஜனின் தோட்டத்தில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பாக்கு மரக் கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
மேலும், அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மரவள்ளிக் கிழங்கு பயிரை சேதப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்த விவசாய பம்பு செட்டுகளையும் சேதப்படுத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி ச.ராஜேஷ் கண்ணன் தலைமையிலான உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இருப்பினும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. அப்பகுதியில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT