தக்காளி விலை மீண்டும் உயர்வு - கோயம்பேட்டில் ரூ.110-க்கு விற்பனை; சில்லறை விலையில் ரூ.140-க்கு கிடைக்கிறது

தக்காளி விலை மீண்டும் உயர்வு - கோயம்பேட்டில் ரூ.110-க்கு விற்பனை; சில்லறை விலையில் ரூ.140-க்கு கிடைக்கிறது
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலைநேற்று கிலோ ரூ.110 ஆக உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.140-க்கு விற்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று உச்ச அளவாக கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.110-க்குவிற்கப்பட்டது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், வில்லிவாக்கம், அரும்பாக்கம் சந்தைகளில் வகை பிரித்து, அளவுக்கேற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது.

இதர காய்கறிகளான பீன்ஸ் ரூ.45, அவரைக்காய் ரூ.40, கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.28, பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், நூக்கல் தலா ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.16, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வால் வீடுகளில் தக்காளி பயன்பாட்டை குறைத்துள்ளனர். ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவுகள் தயாரிப்பதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.

ரேஷன், பண்ணை பசுமை கடைகள்: தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டாலும், அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். தக்காளி விலை உயர்வால் வீடுகளில் தக்காளி ரசம் வைத்தே பல நாள் ஆகிவிட்டதாக ரசம் பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 800 டன் தக்காளி வரும். தற்போது தக்காளி பயிரிடும் பரப்பு குறைந்துவிட்டதால், சந்தைக்கு வரத்தும் குறைந்துவிட்டது.

நேற்றைய நிலவரப்படி 270 டன் மட்டுமே வந்தது. இதனால் நேற்று, இந்த சீசனில் அதிகபட்ச அளவாக கிலோ ரூ.110-க்கு தக்காளி விற்பனையானது. வெளி மாநிலங்களில் இருந்துதக்காளி வரவழைத்து விற்க நினைத்தாலும், வெளி மாநிலங்களிலும் விளைச்சல் இல்லை என தெரிய வருகிறது.

தமிழகத்துக்கு தக்காளி அனுப்பப்படும் பகுதியிலேயே வெளி மாநிலத்தினரும் தக்காளி கொள்முதல் செய்வதால், அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in