

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.
அப்போது, வந்தே பாரத் ரயில்களில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது மற்றும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தேன். ரயில் பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ரயில்பெட்டிகளில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு வசதியாகவும், பயணம் பாதுகாப்பாக அமையவும் உதவியாக இருக்கும். வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு விரைவாக மேற்கொள்ளப்படும்.
சாதாரண மக்களுக்கும்.. அடித்தட்டு மக்களின் ரயில் பயணத்துக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சாதாரண மக்களுக்கும் சிறப்பான ரயில் சேவையைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஐசிஎஃப் பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா உடனிருந்தார்.