ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

விருதுநகர்: மது விலக்கை அமல்படுத்தக்கோரி இம்மாதம் 15-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மதுபாட்டில் உடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது விலக்கை அமல்படுத்தக் கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த 6-ம் தேதி முதல் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்களை மூடினர். ஆனால், டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது. இதை காவல் துறை அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் 40 சதவீதம் பேர் வறுமையில் உள்ளதற்கு காரணம் மதுதான். புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 15-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைப்பு போராட்டம் நடைபெறும். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது 10 விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது நியாய மில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினர் விருப்பம்போல் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட மாட்டார். காரியாபட்டி அருகே மாயக் கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து வரும் 13-ம் தேதி காரியாபட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in